புத்தாண்டு சிறப்பு srikarpagamspecial க்காக ஜோதிட ரத்னா திருவாளர் எம்.கே. நந்தனாரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இத்யாதிகளுடன் உதட்டில் வசீகரச் சிரிப்பையும் பூண்டு எங்களை வரவேற்றார். தாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் எடுத்துக் கூறவும், தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
முதலில் விநாயகர் துதியை சொல்லி விட்டு," நான் வணங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் திருவருளால் இங்கு சொல்லவிருக்கும் அனைத்து ராசிக்காரர்களின் பலன்களும் பலிக்க மனமுருகி வேண்டிக் கொள்கிறேன்" என்றவர், ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்தார்.
"மேசம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களை தவிர மாற்ற எல்லா ராசிக்காரர்களின் புத்தாண்டு பலன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை! நான் மேலே கூறிய அனைத்து ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு ஒரு திருப்பத்தை கொடுக்கும் ஆண்டாகவும், சிறப்பான ஆண்டாகவும் இருக்கும்" என்று சொல்லி விட்டு எங்களை பார்த்தார்.
எங்களுக்கு ஒரே குழப்பம். "என்ன சாமி... எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்ல ஆண்டுன்னு சொல்லிடீங்க. மிச்சம் என்ன ராசி இருக்கு?" என்றோம். மெதுவாக சிரித்தபடி பேச ஆரம்பித்தார். "தம்பி... ஒவ்வொரு ராசிக்கும் இன்னின்ன இடத்தில இந்த கிரகம் இருக்கிறதால கெட்ட பலன் நடக்கும்... நல்ல பலன் நடக்கும்... அப்படி சொல்லி எல்லோரையும் குழப்ப விரும்பல! ரொம்ப நம்பிகையா வருசத்தை தொடங்க இருக்கிற ஒரு மனுஷன்கிட்ட 'இந்த வருஷம் உனக்கு நல்லா இல்ல.. அதனால அடுத்த வருஷம் எந்த முடிவையும் எடு! அப்படின்னு சொன்னா, அவன் மனசு ரொம்ப பலவீனமா போயிடும். இருக்கிற கொஞ்சநஞ்சம் நம்பிக்கையையும் நானே கெடுத்த மாதிரி ஆயிடும். அதனால தான் இப்படி சொன்னேன்." என்றார்.
"சாமி... எதிர்காலத்தில நடக்க போகிற நஷ்டத்தை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை பண்றதுக்கு தானே இந்த ஜோதிடம் உதவுது!"
"உண்மை தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா... ஜோதிடத்தை விட மனபலம் பெரிது. எந்த காரியத்தையும் செய்யும் போது விழிப்புணர்வோடு அதே சிந்தனையா செய்யும் போதும், கடவுள் பக்தியோடு ஒழுக்கமா ஒரு வேலையை செஞ்சா வெற்றி நிச்சயம். அதை தான் திருவள்ளுவர் கூட ரெண்டு வரியில சொல்லி இருக்காரு. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல என்ன புத்தாண்டு பலன் வேணும்?!"
சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க ஜோசியரே...