கிருஷ்ணனும் அர்ச்சுனனும்...


கிருஷ்ணனும் அர்ச்சுனனும் சந்தித்துக் கொண்டார்கள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு...
"வியாபாரமெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு நண்பா?" என்று கிருஷ்ணன் கேட்டான். "ப்ச்... நோ கமெண்ட்ஸ்!" என்றான் அர்ச்சுனன்.
"ஏய்... என்னாச்சு? வியாபாரம் நொடிச்சுப் போச்சா? நான் உன் நண்பண்டா! என் கிட்ட உன் வருத்தத்தை சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போற?"
"குடும்பத்துல பிரிவினை ஆகிப்போச்சுடா! எங்கப்பா பார்த்துக்கிட்டு இருந்த வியாபாரத்தை இப்ப என் தம்பி பார்த்துக்கிறான். எனக்கு தெரிஞ்ச ஒரே வியாபாரம் அது தான். ஒரே ஊருக்குள்ள தம்பிக்கு போட்டியா எப்படி வியாபாரம் செய்யிறதுன்னு வேற தொழிலை தேடிகிட்டு இருக்கேன். ஒண்ணும் அமையல. அப்படியே தொழில் அமைஞ்சாலும் தொடங்கறதுக்கு பயமா இருக்குடா!"
"உன் தம்பி பார்க்குற வியாபாரத்தை நீயும் பார்க்கக் கூடாதுன்னு யாருடா சொன்னது?"
"யாரும் சொல்லல. நானா மனசுக்குள்ள நினைச்சிகிட்டது தான்!"
"அட போடா... பைத்தியக்காரா! உன் திறமையை நீயே வீணடிக்கிறே."
"அப்படி இல்லடா! எதிர் தரப்பில இருக்கிறது யாரு? கூடப்பொறந்த தம்பி, தம்பி மனைவி, புள்ளைங்க... அவங்களுக்கு எதிரா வியாபாரத்தை எப்படி ஆரம்பிக்க் முடியும்? இது துரோகம் இல்லையா?"
"முதல்ல துரோகம்னா என்ன?"
"நம்புனவுங்களை நட்டாத்துல விடறது!"
"அவங்க ஒண்ணும் உன்னை நம்பி இல்ல. அவங்க ஒரு பக்கம் வியாபாரம் பார்க்கட்டும். நீ ஒரு பக்கம் வியாபாரம் பாரு... என்ன அப்படி பார்க்கிற! மகாபாரதம் படிச்சிருக்கியா?"
"ம்.. படிச்சிருக்கேன்!"
அதுல அர்ச்சுனன் இப்படித்தான் எதிர்தரப்புல இருக்கிற சொந்தக்காரங்களை எல்லாம் பார்த்துட்டு, 'அவங்களை கொன்னா பாவம் வந்து சேரும், பழி வந்து சேரும் போர் புரிய மட்டேன்'னு அடம் பிடிச்சாரு. அப்ப சாரதியா இருந்த கிருஷ்ணர் தான் அறிவுரை சொல்லி போர் புரிய வச்சாரு. அது தான் பகவத்கீதை! அன்னைக்கு உடல் வலிமையை காண்பிச்சு போர் புரிஞ்சு நாட்டை ஜெயிச்சாங்க. இன்னைக்கு மூளை பலத்தை காண்பிச்சு வியாபாரம் செஞ்சு பொருளாதாரத்தை ஜெயிக்கணும். போட்டியா இருக்கிறவன் சொந்தக்காரனா இருக்கலாம், ரத்த உறவா இருக்கலாம்... ஏன் என்னை மாதிரி நண்பனாக்கூட இருக்கலாம். வியாபாரம்னு வந்துட்டா இதையெல்லாம் பார்க்கக் கூடாது."
"ரொம்ப தாங்க்ஸ்டா! இவ்வளவு நாள் ஒரு தெளிவில்லாம இருந்தேன். இப்ப தெளிவாயிட்டேன்."
"உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? உலகத்துல எத்தனையோ விஞ்ஞானிங்க நிறைய கண்டு பிடிச்சாங்க. ஆனா எடிசனை பத்தி தான் உலத்துல ரொம்ப பேசறாங்க. அதுக்கு காரணம் அவர் விஞ்ஞானி மட்டும் அல்ல. முதல் நம்பர் வியாபாரி. இத மனசுல வச்சுகிட்டு வியாபாரத்தை தொடங்கு. பெஸ்ட் ஆப் லக்!"