புதிய வ்ருடம்
உங்கள் வாழ்க்கையை
வண்ண வண்ண மலர்கள்
தரும் சந்தோசத்தை போல்
மகிழ்ச்சியாக இருக்கட்டும்!
வெல்கம் 2009!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டு பலன்கள்!

குறளின் குரல்

புத்தாண்டு சிறப்பு srikarpagamspecial க்காக ஜோதிட ரத்னா திருவாளர் எம்.கே. நந்தனாரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இத்யாதிகளுடன் உதட்டில் வசீகரச் சிரிப்பையும் பூண்டு எங்களை வரவேற்றார். தாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் எடுத்துக் கூறவும், தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

முதலில் விநாயகர் துதியை சொல்லி விட்டு," நான் வணங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் திருவருளால் இங்கு சொல்லவிருக்கும் அனைத்து ராசிக்காரர்களின் பலன்களும் பலிக்க மனமுருகி வேண்டிக் கொள்கிறேன்" என்றவர், ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்தார்.

"மேசம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களை தவிர மாற்ற எல்லா ராசிக்காரர்களின் புத்தாண்டு பலன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை! நான் மேலே கூறிய அனைத்து ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு ஒரு திருப்பத்தை கொடுக்கும் ஆண்டாகவும், சிறப்பான ஆண்டாகவும் இருக்கும்" என்று சொல்லி விட்டு எங்களை பார்த்தார்.

எங்களுக்கு ஒரே குழப்பம். "என்ன சாமி... எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்ல ஆண்டுன்னு சொல்லிடீங்க. மிச்சம் என்ன ராசி இருக்கு?" என்றோம். மெதுவாக சிரித்தபடி பேச ஆரம்பித்தார். "தம்பி... ஒவ்வொரு ராசிக்கும் இன்னின்ன இடத்தில இந்த கிரகம் இருக்கிறதால கெட்ட பலன் நடக்கும்... நல்ல பலன் நடக்கும்... அப்படி சொல்லி எல்லோரையும் குழப்ப விரும்பல! ரொம்ப நம்பிகையா வருசத்தை தொடங்க இருக்கிற ஒரு மனுஷன்கிட்ட 'இந்த வருஷம் உனக்கு நல்லா இல்ல.. அதனால அடுத்த வருஷம் எந்த முடிவையும் எடு! அப்படின்னு சொன்னா, அவன் மனசு ரொம்ப பலவீனமா போயிடும். இருக்கிற கொஞ்சநஞ்சம் நம்பிக்கையையும் நானே கெடுத்த மாதிரி ஆயிடும். அதனால தான் இப்படி சொன்னேன்." என்றார்.

"சாமி... எதிர்காலத்தில நடக்க போகிற நஷ்டத்தை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை பண்றதுக்கு தானே இந்த ஜோதிடம் உதவுது!"

"உண்மை தான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா... ஜோதிடத்தை விட மனபலம் பெரிது. எந்த காரியத்தையும் செய்யும் போது விழிப்புணர்வோடு அதே சிந்தனையா செய்யும் போதும், கடவுள் பக்தியோடு ஒழுக்கமா ஒரு வேலையை செஞ்சா வெற்றி நிச்சயம். அதை தான் திருவள்ளுவர் கூட ரெண்டு வரியில சொல்லி இருக்காரு. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்னு சொல்லிட்டாரு. இதுக்கு மேல என்ன புத்தாண்டு பலன் வேணும்?!"

சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க ஜோசியரே...

srikarpagamspecial

கிருஷ்ணனும் அர்ச்சுனனும்...


கிருஷ்ணனும் அர்ச்சுனனும் சந்தித்துக் கொண்டார்கள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு...
"வியாபாரமெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு நண்பா?" என்று கிருஷ்ணன் கேட்டான். "ப்ச்... நோ கமெண்ட்ஸ்!" என்றான் அர்ச்சுனன்.
"ஏய்... என்னாச்சு? வியாபாரம் நொடிச்சுப் போச்சா? நான் உன் நண்பண்டா! என் கிட்ட உன் வருத்தத்தை சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போற?"
"குடும்பத்துல பிரிவினை ஆகிப்போச்சுடா! எங்கப்பா பார்த்துக்கிட்டு இருந்த வியாபாரத்தை இப்ப என் தம்பி பார்த்துக்கிறான். எனக்கு தெரிஞ்ச ஒரே வியாபாரம் அது தான். ஒரே ஊருக்குள்ள தம்பிக்கு போட்டியா எப்படி வியாபாரம் செய்யிறதுன்னு வேற தொழிலை தேடிகிட்டு இருக்கேன். ஒண்ணும் அமையல. அப்படியே தொழில் அமைஞ்சாலும் தொடங்கறதுக்கு பயமா இருக்குடா!"
"உன் தம்பி பார்க்குற வியாபாரத்தை நீயும் பார்க்கக் கூடாதுன்னு யாருடா சொன்னது?"
"யாரும் சொல்லல. நானா மனசுக்குள்ள நினைச்சிகிட்டது தான்!"
"அட போடா... பைத்தியக்காரா! உன் திறமையை நீயே வீணடிக்கிறே."
"அப்படி இல்லடா! எதிர் தரப்பில இருக்கிறது யாரு? கூடப்பொறந்த தம்பி, தம்பி மனைவி, புள்ளைங்க... அவங்களுக்கு எதிரா வியாபாரத்தை எப்படி ஆரம்பிக்க் முடியும்? இது துரோகம் இல்லையா?"
"முதல்ல துரோகம்னா என்ன?"
"நம்புனவுங்களை நட்டாத்துல விடறது!"
"அவங்க ஒண்ணும் உன்னை நம்பி இல்ல. அவங்க ஒரு பக்கம் வியாபாரம் பார்க்கட்டும். நீ ஒரு பக்கம் வியாபாரம் பாரு... என்ன அப்படி பார்க்கிற! மகாபாரதம் படிச்சிருக்கியா?"
"ம்.. படிச்சிருக்கேன்!"
அதுல அர்ச்சுனன் இப்படித்தான் எதிர்தரப்புல இருக்கிற சொந்தக்காரங்களை எல்லாம் பார்த்துட்டு, 'அவங்களை கொன்னா பாவம் வந்து சேரும், பழி வந்து சேரும் போர் புரிய மட்டேன்'னு அடம் பிடிச்சாரு. அப்ப சாரதியா இருந்த கிருஷ்ணர் தான் அறிவுரை சொல்லி போர் புரிய வச்சாரு. அது தான் பகவத்கீதை! அன்னைக்கு உடல் வலிமையை காண்பிச்சு போர் புரிஞ்சு நாட்டை ஜெயிச்சாங்க. இன்னைக்கு மூளை பலத்தை காண்பிச்சு வியாபாரம் செஞ்சு பொருளாதாரத்தை ஜெயிக்கணும். போட்டியா இருக்கிறவன் சொந்தக்காரனா இருக்கலாம், ரத்த உறவா இருக்கலாம்... ஏன் என்னை மாதிரி நண்பனாக்கூட இருக்கலாம். வியாபாரம்னு வந்துட்டா இதையெல்லாம் பார்க்கக் கூடாது."
"ரொம்ப தாங்க்ஸ்டா! இவ்வளவு நாள் ஒரு தெளிவில்லாம இருந்தேன். இப்ப தெளிவாயிட்டேன்."
"உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? உலகத்துல எத்தனையோ விஞ்ஞானிங்க நிறைய கண்டு பிடிச்சாங்க. ஆனா எடிசனை பத்தி தான் உலத்துல ரொம்ப பேசறாங்க. அதுக்கு காரணம் அவர் விஞ்ஞானி மட்டும் அல்ல. முதல் நம்பர் வியாபாரி. இத மனசுல வச்சுகிட்டு வியாபாரத்தை தொடங்கு. பெஸ்ட் ஆப் லக்!"

ஹலோ பிரதர்ஸ்!


பச்சை கலர் சுடிதார் வெள்ளை ஷாலோடு "மேகலா மானேஜர் கூப்பிடறார்..." என்றாள் ஷீலா. மேகலா என்று அழைக்கப்பட்டவள் ஒரு நிமிடம் முகத்தை ?-குறியாக்கி யோசித்தாள். பிறகு திறந்து வைத்திருந்த விண்டோஸை மினிமைஸ் பண்ணி விட்டு எழுந்தாள்.
மானேஜர் அறையை அடையுமுன் சின்ன மேலுதட்டில் வியர்வை முத்துக்கள் படர்ந்தது. கதவை தட்டி,"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்..." என்றாள்.
"நோ எக்ஸ்க்யூஸ்... யு ஆர் ப்ரீ பர்ட் டு திஸ் ரூம்..." என்ற மானேஜருக்கு வயது ஐம்பது இருக்கும். தலைமுடியிலும் கழுத்திலும் 'டை'! "மிஸ் மேகலா... மெயில் பண்றதுக்கு சில மேட்டர்களை சொல்றேன். எழுதிக்கோ..." என்றவர் "சிட் டவுன் ப்ளீஸ்" என்றார். அவள் உட்காருமுன் இடையில் தெரிந்த 'பளீரை' ரசித்தார். "சே... நாளையிலிருந்து சுடிதார் போடணும்" என்று தீர்மானித்துக் கொண்டாள்.
டேபிளிலிருந்த பெயர் பலகை மானேஜரை 'எம். நடேஷ்' என்றது. நாமும் இனி அப்படியே! ஆடையில்லாத பகுதிகளை அவசரமாக ரசித்தபடி 'மெயில் மேட்டரை' கூறினார். பிறகு-
"மேகலா! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீ ப்ரீ தானே?"
"ஏன் ஸார்?" என்றாள்.
"இல்லே... நீ ப்ரீனா வாயேன். உனக்கு இன்ப அதிர்ச்சி ஒண்ணு காத்திருக்கு" என்றார், கண் சிமிட்டியபடி.
மேகலா சொல்லச்சொல்ல ராகவன் கண்களில் ரத்தம் ஏறியது.முஷ்டியை மடக்கி வைத்துக் கொண்டான். "இதை ஏன் முன்னாலயே சொல்லல? இப்ப பாரு... வீட்டுக்கே தைரியமா கூப்பிடறான்!" என்றான் பல்லை கடித்துக் கொண்டு.
"நான் இவ்வளவு நாள் பொறுத்துப் பார்த்தேண்ணா. ஆனா, இப்ப ரொம்ப ஓவரா போனதாலதாண்ணா உன்கிட்ட சொல்றேன்."
"சரி மேகலா! ஞாயிற்றுக்கிழமை உன்னோட நானும் வர்றேன்" என்றான் தீர்மானமாக.
குருவி கத்தியது.
யாராக இருக்கும் என்ற முக பாவனையில் கதவை திறந்தார் மானேஜர் நடேஷ். மேகலாவை பார்த்து மலர்ந்த முகம், பின்னால் நின்ற நிழலை பார்த்து சுருங்கியது. தயக்கத்துடன், "உள்ளே வாங்க" என்றவர் ஷோபாவை காட்டி உட்காரச் சொன்னார்.
"நாங்க ஒண்ணும் உட்கார வரலே. என் தங்கச்சிய தனியா வரச் சொன்னியாமே?"
"மேகலா யாரிவர்?"
"என்னோட அண்ணா!"
"என்கிட்ட பேசு ஸார்! எவ்வளவு தைரியமிருந்தா வீட்டுக்கு வா இன்ப அதிர்ச்சி தர்றேன்னு கூப்பிடுவ..."
"வெய்ட்... வெய்ட் எ மினிட்! நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க" என்றவர் நெற்றியில் வியர்வை அரும்பியது. கண்கள் பயம் காட்டியது.
"எது ஸார் தப்பு? உன்னை மாதிரி ஆள சும்மா விடக்கூடாது!" என்ற ராகவன் முஷ்டியால் தாடையில் குத்தினான். பல்லிடுக்கில் லேசாக ரத்தம் எட்டிப்பார்த்தது. வலி பிராணன் போனது. இதை நடேஷ் எதிர்பார்க்கவில்லை. வலியை விட மேகலா முன் அடி வாங்கியது நெஞ்சை சுட்டது.
"அண்ணா! சும்மா இருங்கண்ணா... அடிக்காதீங்க. நீங்க வந்து எச்சரிச்சிட்டு போவீங்கன்னு தான் கூட்டி வந்தேன். அடிச்சிட்டீங்களேண்ணா!" என்றவள், "சாரி சார். இனிமே என்னை வேலைக்கு வச்சுக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நாளைக்கு ஆபீஸீக்கு வந்து ராஜினாமா கடுதாசி குடுத்துடறேன் சார்!" என்று படப்பாக பேசினாள்.
"மேகலா! நீயாவது என்னை புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். தயவு செய்து அந்த ரூமுக்கு வாம்மா!" என்ற நடேஷ், இதழிடுக்கில் வழிந்த ரத்தத்தை கர்ச்சீப்பால் துடைத்தார்.
"கிழட்டுக்கழுதை... இன்னும் பாரு ரூமுக்கு கூப்பிடறான்."
"விடுங்கண்ணா. ரூமுக்கு தானே சார். வாங்க போகலாம்"
ஹாலை விட அந்த அறை சுத்தமாக இருந்தது. மெலிதாக ஊதுபத்தி வாசனை அடித்தது. கண்களை ஓட்டி பார்த்துக்கொண்டிருந்த மேகலா,"அது ... அது... யார் சார்?"
எதும்மா?" என்று கேட்டான் ராகவன். " அங்க பாருங்கண்ணா! என் போட்டோவில மாலையெல்லாம் போட்டு... குங்குமம் வச்சு..." என்றவள் லேசாக தள்ளாடி தலையை பிடித்துக் கொண்டாள்.
கணேசன் காலிங் பெல்லை அழுத்தினான். அது கத்தவில்லை. 'கரண்ட் கட்' என உணர்ந்து திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்தான். உள்ளறையிலிருந்து பேச்சுக்குரல் கேட்டு நின்றான்.
"சார் இத நீங்க முன்னாலேயே சொல்லி இருந்தா நான் அடிச்சிருக்க மாட்டேன் சார். சாரி சார்... உங்க தங்கச்சி எப்படி சார் செத்தாங்க?"
"அவளுக்கு ப்ளட் கான்சர். ரத்தம் ரத்தமா வாந்தியெடுத்து... வேண்டாத கோயில் இல்ல... ப்ச்... அதை நினைவு படுத்தாதீங்க ப்ளீஸ்! இந்த துயரத்துக்கெல்லாம் உங்க தங்கச்சி தான் மருந்தா இருக்கிறா! அடிக்கடி வந்து போம்மா..."
அவர்கள் ஹாலுக்குள் நுழைவதற்குள் கணேசன் வெளியே நின்று கொண்டு,"சார்... சார்..." என்று அப்போது தான் வந்திருக்கிற பாவனை செய்தான். "வாப்பா... உட்காரு!" என்ற நடேஷிடம் "அப்ப நாங்க கெளம்பட்டுமா சார்?" என்றான் ராகவன். "அடிக்கடி வர்றேன் சார்." என்றாள் மேகலா.
அவர்கள் வெளியேறிச் சென்ற பின், "உன்னை சாயங்காலம் தானே வரச்சொன்னேன். இப்ப ஏன் வந்தே? சரி... சரி... பத்து நிமிஷம் இரு. பணத்தை எடுத்திட்டு வர்றேன்" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
ஷோபாவில் சாய்ந்து கொண்டான் கணேசன். ' என்கிட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை கொடுத்து பெரிசுப்படுத்தச் சொல்லும் போது மனைவின்னு சொன்னாரே! இவங்ககிட்ட தங்கச்சிங்கிறார். சம்திங் ராங்! ஒருவேளை தங்கச்சி மாதிரி இருக்கேன்னு சொல்லிச்சொல்லியே அவளை மல்லாக்க வக்க ஏற்பாடு செய்யிறாரோ... இப்படி யோசிச்சா கணக்கு நேராகுதே! டே கிழவா... திட்டம் போட்டு கவுக்கப் பார்க்கிறியா? ஆக உண்மை தெரிஞ்சு போச்சு. இப்ப என்ன பண்ணலாம்? கிழவனை மிரட்டி பணம் கறக்கலாமா... இல்ல, அந்த புள்ளைகிட்ட உண்மையை சொல்லி உஷார் படுத்தலாமா... குழப்பமா இருக்கே! ஹலோ பிரதர்ஸ்! நீங்களாவது இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்!
நன்றி: athikaalai